இறைவனே இயற்கையின் வடிவங்களாய் நின்று அனுபவங்கள் மூலமாக குருவாகத் துலங்குவார் என்று சென்ற பதிவில் குறிப்பிட்டிருந்தேன். அவர் மனித வடிவில் சற்குருவாய் உணரப்படுகிறார். சற்குருவானவர் ஞானிகள் மூலம் ஞான விஷயங்களை நமக்குத் தெளிவிக்கிறார். அவர்கள்எந்த வேசத்திலும் இருப்பார்கள். காவியுடை உடுத்திதான் வருவார்கள் என்றில்லை. பிச்சைக்காரர்கள் போல, பைத்தியக்காரர் போல, நம்மைப் போல மக்கள் மத்தியில் நடமாடிக் கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு சற்குருவின் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். அவர்களுக்குள்ளே எப்போதும் எண்ணங்கள் மூலம் தொடர்பு இருந்து கொண்டே இருக்கும். சமீபத்தில் பரபரப்பாக இயங்கிக் கொண்டிருக்கும் திரு நெல்வேலி வண்ணார்பேட்டையில் அப்படி ஒருவரை நான் சந்திக்க நேர்ந்தது. நான் கல்லாவில் அமர்ந்து ஒரு புத்தகத்தை வாசித்துக் கொண்டிருந்தேன். பகல் நேரம் அன்று கூட்டம் அதிகமில்லை.
யாரோ வருவது போல் தோன்றவே, நிமிர்ந்து பார்த்தேன். ஐம்பது வயது மதிக்கத்தக்க ஒரு மனிதர் நின்றிருந்தார். வெள்ளை சட்டை, வெள்ளை வேஷ்டி, கையில் ஒரு மஞ்சள் பை. ஐயா என்ன வேண்டும் என்று கேட்டேன் ? அவர் டக்கென்று நீ தானே அழைத்தாய் ? பிறகு என்னிடம் கேட்கிறாய் ? என்றார். எனக்கு குழப்பமாகி விட்டது. வியாழக்கிழமை என்றாலே பிச்சைக்காரர்கள் தொல்லை அதிகமாக இருக்கும். இவரைப் பார்த்தால் அப்படியும் தெரியவில்லை. டீ சாப்பிடுகிறீர்களா ? என்று கேட்டேன். சரி போடச் சொல் என்றார். பிறகு மெதுவாகக் கேட்டேன் நான் உங்களைப் பார்த்ததே இல்லையே ? நான் அழைத்தேன் என்று சொல்கிறீர்களே ? என்று கேட்டேன். ஐயா சொன்னார்கள் ''சேய் அழைக்கிறான் செல் என்று '' அதனால் வந்தேன். சரி போய் வருகிறேன் என்று சொல்லி டீக்கான பணத்தை தந்துவிட்டு போய் விட்டார். அதன் பிறகு எப்போதாவது வந்து ஏதாவது சொல்லி விட்டுப் போவார். அப்படி ஒரு முறை அவர் வந்திருந்த போது என்னுடை ஜோதிட நண்பர் ஒருவர் கடைக்குள் அமர்ந்து என்னிடம் பேசிக் கொண்டிருந்தார். இவரைக் கண்டவுடன் எழுந்து நின்று வணங்கி நலம் விசாரித்து விட்டு வெளியில் சென்று அவரிடம் பேசிவிட்டு வந்தார். அவர் சென்ற பிறகு நண்பரிடம் விசாரித்தேன். அவர் ஒரு ஞானி என்றும். அகத்தியர் அவரிடம் பேசுவார் என்றும். பெரும்பாலான நேரங்களில் தவநிலையில்தான் இருப்பார் என்றும் சொல்லி, நிறைய சித்திகள் அடைந்தவர் என்றும் சொன்னார். எனக்கு நம்ப முடியவில்லை. எனக்கு அப்போதுதான் புரிந்தது அவர் முதல் நாள் ஐயா சொன்னார்கள் என்று சொன்னது அகத்திய பெருமானை என்று. அதன் பிறகு அவரோடு நெருக்கம் அதிகமானது. என்னிடம் சத்தியம் வாங்கிக் கொண்டார், யாரிடமும் தன்னை வெளிப்படுத்தக் கூடாது என்று. மக்கள் இவ்வளவு துன்பப்படுகிறார்கள், கொத்துகொத்தாய் செத்து மடிகிறார்கள் இதையெல்லாம் பார்த்துக் கொண்டு ஐயாவும் சரி, நீங்களும் சரி ஒன்றும் செய்யாமல் இருப்பது ஏன் ? என்று ஒரு நாள் கேட்டு விட்டேன். ஒரு முறைப்பு, அப்பா அப்படி ஒரு கூர்மையான பார்வையை வேறெங்கும் நான் பார்த்த தில்லை.
சில நொடிகளில் சாந்தமாகிய அவர், அதை நீயே தெரிந்து கொள் என்றதோடு, இனி இப்படிப்பட்ட கேள்விகளைக் கேட்காதே என்றார். நான் ஒன்றும் பேசவில்லை. எனக்கு அவர் சில விஷயங்கள் மூலமாகத் தன்னை உணர்த்திவிட்டார்.
இவ்வளவு பெரிய விளக்கம் ஏன் ?என்றால், ஞானிகள், பெரியோர்களை சந்தித்தால் என்ன நடக்கும் ? இப்படி ஒரு சந்தேகம் நாரதருக்கு வந்துவிட்டது. உடனே அவர் பரந்தாமனிடம் கேட்க, அவர் ஒரு புழுவை சுட்டிக் காட்டி அதனிடம் கேட்கச் சொன்னார். நாரதர் கேட்ட மாத்திரத்தில் அது செத்து வீழ்ந்தது. பரந்தாமன் அதன் பிறகு பட்டாம் பூச்சியிடம் கேட்கச் சொன்னார் அதுவும் நாரதர் கேட்ட மாத்திரத்தில் செத்தது. நாரதர் கலங்கினார். இறைவனிடம் முறையிட்டார். கொஞ்ச நாள் கழித்து வா என்று அனுப்பி விட்டார் பரந்தாமன். சிறிது நாள் கழித்து வந்த நாரதரிடம் ஒரு மான் குட்டியை கேட்கச் சொன்னார் . பாவம் அதுவும் மாண்டது. மீண்டும் சிறிது நாள் கழிந்த பிறகு நாரதர் சென்ற போது பரந்தாமன் ஒரு கன்றுகுட்டியைக் காட்டி அதனிடம் கேட்கச் சொன்னார். உடனே நாரதர் எல்லோரும் என்னைக் கலகக்காரன் என்றுதான் சொல்வார்கள். இப்படியே போனால் கொலைகாரன் என்று சொல்லும் நிலை வந்துவிடும் போலிருக்கிறதே என்று புலம்பியபடி கன்றின் அருகில் சென்றார். பரந்தாமன் ஒரு நமட்டுச் சிரிப்பு சிரித்துக் கொண்டார். வழக்கம் போல கன்றுக்கட்டியும் செத்தது. நாரதர் மிகுந்தந மனவருத்தமுடன் சென்றார். சில மாதங்கள் சென்ற பிறகு நாராயணா இப்போதாவது சொல்லேன் பெரியோர் தரிசனத்தால் விளையும் பயன் என்ன ? பரந்தாமனும், பிரம்ம புத்திரனே நீண்டநாள் புத்திரப் பேறு இல்லாமல் இருந்த காசி ராஜனுக்கு ஒரு ஆண் குழந்தை பிறந்திருக்கிறது. அதனிடம் கேள் உனக்கு விளக்கம் கிடைக்கும் என்றார். உதை தான் கிடைக்கும். என்று நாரதர் அஞ்சினார். பரந்தாமன் தைரியம் சொல்லவே அஞ்சியபடியே போய் குழந்தையிடம் கேட்டார். நல்ல வேளை குழந்தை சாகவில்லை என்று நாரதர் எண்ணிய வேளையில் அந்த அதிசயம் நடந்தது. பிறந்து ஓரிரு நாட்களே ஆன குழந்தை பேசத் தொடங்கியது. மகரிஷியே புழுவாய் இருந்த நான் உமது தரிசனத்தால் பட்டாம் பூச்சியாகப் பிறந்தேன். மீண்டும் உங்களை தரிசித்ததால் மான் குட்டியாகப் பிறக்கும் பாக்யம் பெற்றேன். அப்போதும் உங்கள் தரிசனம் கிட்டவே பசுங்கன்றாய் பிறந்தேன். இறைவன் கருணையால் அப்போதும் உங்களை தரிசித்ததால் அரிய மானிடப்பிறவி கிடைத்தது என்றது. அதாவது பெரியோர், ஞானிகள் தரிசனம் புழுவைக்கூட ஒப்பற்ற மனிதனாக மாற்றும் வலிமை உடையது என்பது தத்துவம். எனவே அனைவரும் ஞானிகளைச் சார்ந்து அவர்களுக்கு தொண்டு செய்து வாழ்வதால் பிறவிப் பயனை அடையலாம். கொடிய விஷத்தையும் அமிர்தமாக மாற்றும் வல்லமை உடையவர்கள் ஞானிகள். அவர்கள் எப்போதும் உலக நலன் கருதியே நிஷ்டையில் இருப்பார்கள். உலகப் பொருள்களில் பற்று வைக்க மாட்டார்கள். சாஸ்திரம் பார்க்காமலையே எல்லா சாஸ்த்திரங்களையும் மக்களுக்கு போதிப்பார்கள். அவர்கள் இருக்கும் இடமெல்லாம் செழிக்கும். அத்தகைய ஞானிகள் நாலு வகையாக இருக்கிறார்கள். பிரம்மவித்து, பிரம்மவரன், பிரம்ம வரியன், பிரம்மவரிட்டன் என்பதே அந்த நாலு வகையாகும். குடும்ப வாழ்வில் இருந்து கொண்டே ஞானம் பெற்று தன்னைப் போல் மற்ற குடும்த்தினர் அனைவரும் ஞானம் பெற வேண்டும் என எண்ணி அதற்காக உழைப்பவரே பிரம்மவித்து எனப்படுவார். அடுத்த பிரம்மவரன் என்பவர்கள் பசிக்கிற போது தனக்கு பிடித்தவர்களிடம் யாசித்து உணவருந்திவிட்டு எங்காவது ஓரிடத்தில் அமர்ந்து தியானம் செய்து கொண்டிருப்பர். இவர்களுடைய பசி ஆற்றியவர்களுக்கு சற்குருவின் அருள் கிடைக்கும்.
பிரம்மவரியன் என்ற நிலையில் உள்ளவர்கள் யாரிடமும் எதையும் யாசிக்க மாட்டார்கள். ஏதோ மரத்தடியில் அமர்ந்தோ, சாலையில் நின்று கொண்டோ தியானம் செய்து கொண்டே இருப்பார்கள். நல்ல ஆன்மாக்கள் இவர்களை கடந்து செல்லும் போது அன்பு கூர்ந்து தரும் உணவை ஏற்றுக் கொள்வார்கள்.அப்படி இல்லை என்றால் ஒரு மாதம் ஆனாலும் பட்டினியாக இருப்பார்கள். இவர்களின் பசியாற்றியவர்களை துன்பம் நெருங்க அஞ்சும்.
பிரம்மவரீட்டன் என்ற நிலை ஞானிகள் யாரிடமும் யாசிப்பதில்லை. யார் கொடுத்தாலும் ஏற்பதில்லை. காற்றையே உணவாகக்கொண்டு இறைவனோடு கலந்து நிற்பார்கள். இவர்கள் பேச்சு மிகக்குறைவு. இவர்களைப் பார்த்தாலே பாவ விமோசனம்தான். இத்தகைய ஞானிகளை கண்டு கொண்டு அவர்களுக்கு பணிவிடை செய்து, சற்குருவின் பரிபூரண அருளைப் பெற்று உய்வோமாக.
வாழ்கவையகம் வாழ்கவையகம் வாழ்கவளமுடன்.
courtesy:Monuanthin alaigal
No comments:
Post a Comment